2020 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது. இதனை இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இலங்கை நேரப்படி இன்றிரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணிவரையான காலப் பகுதியில் சந்திர கிரகணம் இலங்கைக்கு தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமியானது கடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. 

சூரியனிலிருந்து ஒளியை சந்திரன் பெறும் நிலையில், அதனை பூமி தடுக்கிறது.

கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது.

இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயர் சூட்டியுள்ளது நாசா. இதேபோல், இந்த ஆண்டில் 4 சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.