குண்டுதாரியொருவரின் அவுஸ்திரேலிய உறவு உறுதி

உயிர்த்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட குண்டுதாரிகளில், ஒருவர் அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்றுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மெரிஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அப்துல் லாதிஃப் ஜமீல் மொகமட் என்ற அவர் அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை பயின்றுள்ளதுடன், அவரின் சந்தேகித்திற்கிடமான உறவுகள் தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு துறையினால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அவர், முதுநிலை பட்டப்படிப்பை தொடரவே அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தீவிரவாத ஆலோசனைகளுக்கு அடிமையான அவர், முற்றிலும் வித்தியாசமான நபராக மாறியதாக அவரது சகோதரி ஒருவர், அந்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.