இலங்கைக்கு பேரிடியாக மாறிய இந்தியா மீதான சந்தேகம்

இலங்கைக்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் முறுகல்நிலையை ஏற்படுத்த இந்தியா முயல்கின்றது என்ற சந்தேகத்தின் காரணமாகவே இலங்கை குண்டுதாக்குதல்கள் குறித்து இந்தியா விடுத்த முன்கூட்டிய எச்சரிக்கையை புறக்கணித்தது என இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையை எடுக்குமாறு தூண்டுவதன் மூலம் இந்தியா இலங்கைக்கும் பாக்கிஸ்தானிற்கும் முறுகல்நிலையை ஏற்படுத்த முயல்கின்றது என தற்போது பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார் என தன்னை இனம்காட்ட விரும்பாத அதிகாரியொருவர் குறித்த ஊடகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாக்கிஸ்தானிற்கு எதிரான இந்திய கூட்டணியில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை, என தெரிவித்துள்ள அந்த அதிகாரி இலங்கையில் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரிப்பதன் மூலம் இந்தியா பாக்கிஸ்தான் குறித்த அச்சத்தை உருவாக்க முயல்கின்றது என கொழும்பில் அதிகாரிகள் கருதியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு படையினர் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் ஏற்படக்கூடிய ஆபத்தை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை அவர்களும் இந்தியாவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.