மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 4 பிள்ளைகளின் தாயின் உயிர் பிரிந்தது

இலங்கையில் நடாத்தப்பட்ட மிகக் கோடுரமான தற்கொலை தாக்குதல் காரணமாக பல குடும்பங்களின் பிள்ளைகள் தாய் தந்தையரை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

இவ்வாறு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் படுகாயமடைந்த தனது தாயார் சுகமடைந்து வீட்டிற்கு வருவார் எனக் காத்திருந்த கல்லடி வேலூரைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கும் இறுதியில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு கல்லடி வேலூரைச் சேர்ந்த கிரிஜா பிரசாந்த் (36வயது) என்பவர் கடந்த 29ம் திகதி மரணமடைந்துவிட்டார்.

நான்கு பிள்ளைகளின் தாயான இவரின் உயிரிழப்பு மட்டக்களப்பு மக்களை மேலும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

03 ஆண் பிள்ளைகளையும் 01 பெண் குழந்தையையும் தவிக்கவிட்டு விட்டு கடவுள் இவரது உயிரையும் பிரித்தெடுத்துவிட்டதாக இவரது உறவினர்கள் அழுது புலம்புகின்றனர்.

பி.சுஜீவ் பி.சாருகேஸ் பி.துர்க்காசினி பி.சர்வித் என்ற நான்கு குழந்தைகளும் தாயின் இழப்பை தாங்காது தவிக்கின்றனர்.

கூலித்தொழில் புரியும் அவரது கணவர் பிரசாந்திற் மனைவியின் இழப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் பூதவுடல் (30) அவர்களது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 04.30 மணியளவில் கல்லடி பொது மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இவரது மரணத்துடன் சேர்த்து 29 பேர் பலியாகியுள்ளனர்

கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைகிறாள் அந்த தாய்!