ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை முற்றாக அழிக்க நிலையான திட்டமிடல் அவசியம்:சரத் பொன்சேகா

இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை முற்றாக அழிக்க நிலையான திட்டமிடல் அவசியமாகும் வெறும் சோதனை நடவடிக்கைகள் மூலம் முடக்க முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்தி நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை வெறும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் மாத்திரம் அழித்துவிட முடியாது. 

அதற்கு ஒரு முறையான திட்டமிடலுடன் செயற்பட வேண்டும். இரு வருடங்களானாலும் இதற்கான தீர்வினைப் பெற முடியாமல் போய்விடும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹா நாயக்க தேரர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பலர் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேட்குமாறு கோருகின்றனர்.எனினும் அதனை வழங்குவதில் விருப்பமில்லாததைப் போல் செயற்படுகின்றனர் என்று வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரருடனான சந்திப்பின் போது சரத் பொன்சேக்க தெரிவித்தார்.

தொடர்ந்து மல்வத்து பீட அநுநாயக்க ஹிம்புல் கும்புரே விமல் தர்ம தேரர், உங்களுடைய காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பீர்கள் என்று வினவியதற்கு பதிலளித்த அவர், முதலாவதாக பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். 

இதன் போது இராணுவம்,புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் மிகவும் உத்வேகத்துடன்  செயற்பட வேண்டும்.

30 வருட கால யுத்தம் இடம்பெற்ற போது அதனை நிறைவடையச் செய்வதற்கு திட்டமிடலொன்று காணப்பட்டது.

அதன்படியே நாம் செயற்பட்டோம்.அதை விடுத்து இவ்வாறு எந்தவொரு திட்டமிடலுமின்றி எல்லா பிரதேசங்களிலும் சோதனை செய்தால் மாத்திரம் போது. திட்டமிடலொன்று இல்லாமல் இரண்டு மாதம் அல்ல, இரண்டு வருடங்கள் கடந்தாலும் இதனைச் செய்து முடிக்க முடியாது என்றார்.

கோத்தாபய ராஜபக்ஷ இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியதற்கு பதிலளித்த அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது பாரியளவிலான சர்வதேச ரீதியிலான ஒரு பயங்கரவாத அமைப்பாகும். 

எனவே இதன் பின்னணியில் கோத்தாபய இருப்பார் என்று நான் எண்ணவில்லை. 

காரணம் இந்த அமைப்பை வழிநடத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என அவர் இதன்போது தெரிவித்தார்.