கைதான யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடராதிருக்கும் வகையில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்களை கைதுசெய்யும் வகையில் காவற்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படங்கள் நீண்ட காலமாகவே அங்கு இருப்பதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், அவசரகால பிரகடனத்துக்கு முன்பாக இந்தப் படங்களை வைத்திருப்பது குற்றங்களாகக் கணிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறும் அந்த கடிதத்தில் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.