பிரபாகரன் முல்லைத்தீவிலேயே இருப்பதாக இலங்கைப் பிரதமர் கூறுகிறார்

05-05-2009 – ஈழம் 247

இந்த செய்தி இன அழிப்பு இடம் பெற்று 10 வருடம் கடந்ததை நினைவூட்டும் வகையில் மீள் பதிவிட படுகின்றது (மே 1- மே19)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச படையினரால் இதுவரை விடுவிக்கப்படாமல் எஞ்சியுள்ள சுமார் நான்கு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தங்கியிருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 

இன்று அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதத்தின்போது கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் விக்கிரமநாயக்கா, எஞ்சியுள்ள நான்கு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பொது மக்களையும், பிரதேசங்களையும் விடுவிக்கும் வரை படை நடவடிக்கை தொடரும் என்றும், அரசாங்கம் எவ்வித சர்வதேச அழுத்தங்களுக்கும் பணியாது என்றும் தெரிவித்திருக்கிறார். 

சுமார் நான்கு சதுரகிலோமீட்டர் பரப்பளவிற்குள் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறாயின் புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே, அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டாரா, அல்லது அவர் இன்னமும் அங்கேயே தங்கியிருக்கிறாரா என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார். 

நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்தான் மிச்சமுள்ள விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். அங்குதான் பிரபாகரனும் இருப்பதாக உறுதியான உளவுத் தகவல் கிடைத்துள்ளது.

54 வயதாகும் பிரபாகரன் தன்னிடம் உள்ள வீரர்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். 

விடுதலைப் புலிகளிடம் இன்னும் பெரிய அளவில் ஆயுதங்கள் உள்ளன. அதை வைத்துக் கொண்டு அவர்கள், ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. எனவே அவரால் தப்பிச் செல்ல முடியாது என்றார் விக்கிரமநாயக்க.