முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை தடுப்பதற்கு இலங்கை தவறிவிட்டது- சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை அரசாங்கம் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர்  தயாகி ருவன்பத்திரன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குரோதம் வெறுப்புணர்வு அச்சம் வன்முகைளை தூண்டுபவர்கள் சமூகங்களிற்கு இடையில் மோதல்களை உருவாக்குபவர்களிற்கு எதிராக மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கும்போது மனித உரிமையை மனதில் கொண்டு செயற்படவேண்டும் என தெரிவித்துள்ள  சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர்  முன்னைய தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை தடுத்துவைத்திருக்கும் போதும் மனித உரிமைகளை கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் விசாரணைகளி;ன் போது பயன்படுத்தப்படும் நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2018 மார்ச் மாதம் முஸ்லீம்களிற்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் இந்த தாக்குதல்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் அச்சமூட்டுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் தீடிரென இடம்பெறவில்லை முஸ்லீம்களிற்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டன என தெரிவித்துள்ள தென்னாசியாவிற்கான ஆராய்ச்சியாளர்  அதிகாரிகள் ஆபத்துக்கள் குறித்து முன்கூட்டியே வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வன்முறைகளை தடுத்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.