தற்போது நீர்கொழும்பின் நிலை என்ன? இரவில் நடமாடுபவர்கள் யார்? வதந்தியா உண்மையா?

நாட்டில் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் காரணமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு வாழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையிலும் ஆங்காங்கே இடம்பெறும் வன்முறைகள், தம்மையும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளதாக அந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களின் போது பிரதான இலக்குகளில் ஒன்றாக நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயமும் அடங்கியிருந்தது.

இதனால் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் மாத்திரமன்றி நீர்கொழும்பு நகரம் உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஐந்தாம் திகதி நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி சங்கங்களைச் சேர்ந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கினை அடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைக்கபட்டு பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது.

பின்னர் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் அன்று இரவு வேளையில் போருதொட்ட, ஏத்துக்கால பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.

போருதொட்ட மற்றும் பெரியமுல்லை பிரதேசங்களில் உள்ள மூன்று பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அடுத்த நாளே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்திருந்தார்.

தாக்குதல்களுக்கு இலக்கான தெனியாய பள்ளிவாசலையும் பார்வையிட்ட அவர், தாக்குதல் சம்பவத்திற்கு தமது வருத்தத்தை தெரிவித்ததுடன், அமைதியை பேணுமாறும் வலியுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நகரில் சுமூக நிலைமை தோன்றிய போதிலும் குருநாகல், குளியாபிட்டிய மற்றும் நிக்கரவெட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து நீர்கொழும்பு நகரில் மீண்டும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதுடன், மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இரவு வேளைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக பிரதேசவாசிகள் மத்தியில் வதந்திகள் பரவும் நிலையில், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை மேலும் வலுவடைந்து வருவதாகவும் நீர்கொழும்பு வாழ் மக்கள் கூறுகின்றனர்.

வதந்திகள் காரணமாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுவதுடன், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவதும் பிரச்சினைக்குள்ளாகியிருப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற செய்திகளை திட்டமிட்ட குழுவினர் பரப்புகின்றனரா? அல்லது திருடர் நடமாட்டமா? அல்லது இது வெறும் வதந்தியா என்பது சரியாகத் தெரியாத நிலையில் மக்கள் உள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் குறிப்பிட்டார்.

அச்சம் காரணமாக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் மாத்திரமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் வதந்திகள் பரப்படுகின்றமை தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரிலேனும் கைது செய்யப்படவில்லை என எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

அச்சம் காரணமாக சில பிரதேசங்களில் இரவு வேளையில் பிரதேவாசிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதை அவதானிக்க முடிவதுடன், மதஸ்தலங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருடன், பிரதேசவாசிகளும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

பல்லினத்தவர்களும் வசிக்கும் நீர்கொழும்பு நகரில் மக்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே நீர்கொழும்பு வாழ் மக்களின் எதிர்பார்ப்பதாக காணப்படுகின்றது.