விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடிப்பு: இலங்கை ஜனாதிபதி

16-05-2009 – ஈழம் 247

இந்த செய்தி இன அழிப்பு இடம் பெற்று 10 வருடம் கடந்ததை நினைவூட்டும் வகையில் மீள் பதிவிட படுகின்றது (மே 1- மே19)

26 வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியிருக்கிறார்.ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர், விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார். 

முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள், இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

அந்தப் பகுதியும் விரைவில் கைப்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எந்தவிதமான தகவல்களும் வரவில்லை. 

ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் அந்த போர் பகுதியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்கிடையே, போரினால் அகதியாகியுள்ள மக்களிடம் சென்று உதவுவதற்கு மனிதாபிமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், அதன் பலனை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் எச்சரித்திருக்கிறார்.