விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

16-05-2009 – ஈழம் 247

இந்த செய்தி இன அழிப்பு இடம் பெற்று 10 வருடம் கடந்ததை நினைவூட்டும் வகையில் மீள் பதிவிட படுகின்றது (மே 1- மே19)

இலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.இதன் மூலம், கடந்த 26 ஆண்டுகளில் முதல் முறையாக, விடுதலைப் புலிகள் கடல் வழியாகச் செல்லும் வாய்ப்பை இராணுவம் அடைத்துவிட்டது. 

புலிகள் வசம் உள்ள மீதிப் பகுதிகளும் விரைவில் தங்கள் வசம் வந்துவிடும் என்று இலங்கை இராணுவத்துக்காகப் பேசவல்ல பிரிகேடியர் உதயநாணயக்கார பிபிசியிடம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, விடுதலைப் புலிகளிடமிருந்து இதுவரை எந்தக் கருத்தும் கிடைக்கப் பெறவில்லை. 

போர்ப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, விடுதலைப் புலிகள் அந்தப் பகுதியில் பெருமளவு நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். தற்போது அது முழுமையாக மாறிவிட்டது என்று இலங்கையில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.