ஜனாதிபதி தலைமையில் படைவீரர்களுக்கான 10 ஆவது தேசிய நிகழ்வு!

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த படைவீர்களை கௌரவிக்கும் படைவீரர்களுக்கான 10 ஆவது தேசிய நிகழ்வு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  இன்று இடம்பெற்றது. 

பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள படைவீரர்களுக்கான நினைவுத் தூபியில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ படைவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஜனாதிபதி வருகையுடன் மாலை  4.30 மணியளவில் ஆரம்பமாகியது. 

ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் சன்மிக லியனகேவின் வரவேற்புரையை அடுத்து சர்வமத வழிப்பாடுகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உரையும் இடம்பெற்றது. 

அதன் பின்னர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பேராசிரியர் கருணாரத்ன பண்டாரவின் வடிவமைப்பு மற்றும் பயிற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைவாத்திய நிகழ்வு இடம்பெற்றது.

யுத்தத்தில் உயிர் நீத்த படைவீரர்களின் உறவினர்ககளும்  இந்த தேசிய படைவீரர் கௌரவிப்பு  தின நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்ததோடு, யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்திருப்பினும் தமது இறந்த வீரர்களை நினைவுப்படுத்தும் வகையில் தமது கவலையை வெளியிட்டனர்.  

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்  விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க போன்றோரும் பங்குப்பற்றியிருந்தனர். 

மேலும் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன, விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி , கடற்ப்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சில்வா , இராணுவ தளபதி லுதினல்  ஜனரால் மகேஷ் சேனாநாயக்க, பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரால் சாந்த கோட்டே கொட , ஜனாதிபதி செயலாளர் உதய ரஞ்சித் செனவிரத்ன, மேல் முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோதாகொட மற்றும் நீதிபதி தப்புல த லிவேரா உள்ளிட்டொரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.