பாதுகாப்பு தரப்பினரே ஆவா குழுவை உருவாக்கினர் – அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

ஆட்சியாளர்களும் பாதுகாப்பு தரப்பினருமே ஆவா குழுவை உருவாக்கி அதனை உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

விடுதலைப் புலிகளின் பிரச்சினை முடிந்து 10 ஆண்டுகளின் பின்னர் நாட்டில் ஆவா குழு என்று ஒன்று இருக்கின்றது என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

யார் இந்த ஆவா குழு. நாட்டின் சட்டமும் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினருமே ஆவா குழுவை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி அதற்கு வலுவூட்டினார்.

இவர்களே ஆவா குழுவை அமைக்க சான்றிதழை வழங்கினர். ஒரு நபருக்கோ அல்லது குழுவுக்கோ ஆவா குழுவை அமைக்க நாட்டின் பாதுகாப்பு தரப்பினரே உதவினர்.

மட்டக்களப்பில் மங்களராம விகாரைக்கு அருகில் புதூர் பிரதேசத்தில் இரண்டு பொலிஸார் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர்.

சஹ்ரானின் குழுவே இவர்களின் கழுத்தை அறுத்தது. சிறைக்கு சென்றது யார் ஆவா குழு.

கழுத்தை அறுக்கக் கூடிய ஆவா குழு நாட்டில் இருக்கின்றது என்று உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி, ஆவா குழு, இனவாத அடிப்படைவாத குழுக்களை உருவாக்க திறமையான நாடு உலகில் எங்கும் இல்லை.

இந்த நாட்டின் ஆட்சியாளர்களும், சட்டமும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் இதனை செய்கின்றனர். இதனால், நாட்டுக்காக நாம் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும்.

30 ஆண்டுகளாக போரை எதிர்நோக்கிய, தமிழ் மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்க போகிறது என்று நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

30 ஆண்டுகளாக போரை எதிர்நோக்கிய சிங்கள மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்க போகிறது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்.

இதனையே 30 ஆண்டுகளாக எதிர்கொண்ட முஸ்லிம், பறங்கியர் போன்ற பல இனத்தவருக்கு கிடைக்க போகும் நியாயம் என்ன என்று நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்.

எனினும் எமது நாட்டில் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்தி, போரை பார்க்க இடமளித்து, மக்கள் மத்தியில் இன, மத, குல பேதங்களை உருவாக்கி, இந்த நாட்டை அழிக்கும் சில ஆட்சியாளர்கள் தமது அரசியல் அடையாளத்தை மட்டும் தற்காத்து கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

கிழக்கில் ஒரு சம்பவம் நடந்த பின்னர், அது தொடர்பாக சிங்கள, முஸ்லிம், ஜே.வி.பி அரசியல்வாதிகள் எப்படி நடந்துக்கொள்கின்றனர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் எப்படி நடந்துக்கொள்கின்றன என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இந்த அரசியல்வாதிகள் எவரும் கீழ் மட்டத்தில் வாழும் அப்பாவிகள் மக்கள் பற்றி சிறிதளவிலும் சிந்தித்து செயற்படுபவர்கள் அல்ல.

இப்படி சிந்திப்பவர்களாக இருந்தால், வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் சார்பில் குரல் கொடுத்திருப்பார்கள்.

மக்கள் எழுச்சி பெற வேண்டிய கடமைகளை செய்திருப்பார்கள். ஒரு மாதமாக நாடு ஸ்தம்பித்துள்ளது. மீன்களையும் விறகுகளையும் விற்று வாழும் அப்பாவி மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் அரசியல் தலைவர்கள் இல்லை. சிங்களம். தமிழ், முஸ்லிம் எந்த இனமாக இருந்தாலும் நான் என்னால் முடிந்த அனைத்தைம் செய்வேன் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.