அவசரகாலச் சட்டம் நிறைவேற்றம்- கூட்டமைப்பு எதிர்ப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வாக்கெடுப்பின்போது சபையில் இருந்த ஆளுங்கட்சியின் 19 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, நேற்றைய சபை அமர்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கும் முழுநாள் விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

முழுநாள் விவாதமாக இடம்பெற்ற இந்த விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சரோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரோ இல்லை எனவும், பாதுகாப்பு செயலர், பாதுகாப்பு அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முன்வைத்தனர்.

சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் சாந்த பண்டார, அரச தலைவர் – தலைமை அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் அனைவரும் அவசர பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே சபைக்கு வரமுடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

எனினும் முக்கியமான விவாதம் ஒன்று இடம்பெறும் நேரத்தில் கூட்டத்தை நடத்துவது அவசியமா, சபை முடிந்தவுடன் நடத்தியிருக்கக்கூடாதா என்று ஆளும் தரப்பில் இருந்த சிலரும் எதிர்க்கட்சியில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சிலரும் கேள்வி எழுப்பினர்.

இதன் பின்னர் பிற்பகல் சபைக்கு வந்த சபாநாயகர் தாம் அனைவரும் அரச தலைவர் தலைமையில் பாதுகாப்புக் குழுக் கூடத்தில் கலந்துகொண்டதாகவும், அதன் காரணமாக சபைக்கு அதிகாரிகள் வர முடியாது போனதாகவும் குறிப்பிட்டார்.

அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிறிதரன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக கூறினார்கள்.

நாட்டில் ஏனைய பகுதிகள் சோதனைகள் ஒரு விதத்திலும் வடக்கில் மிகவும் மோசமான வகையிலும் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும் என்று அவர்கள் சபையில் சுட்டிக்காட்டினர். அதற்கமைய விவாதம் முடிவடையும் வேளையில் பிற்பகல் 5.57 மணிக்கு மாவை. சேனாதிராசா வாக்கெடுப்பை கோரினார். அதற்கமைய கோரம் அடிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகியன. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், சிறிதரன், கோடிஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன், சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் அவசரகால சட்டத்தை நீடிக்கும் யோசனையை எதிர்த்து வாக்களித்தனர்.

வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான தீர்மானம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார். அதன்பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் ஜூன் மாதம் 4ஆம் திகதி கூடவுள்ளது என்ற அறிவிப்பையும் அவர் விடுத்தார்.

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் நாடாளுமன்ற அமர்வில் நேற்றுப் பங்கேற்கவில்லை. மூவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். மற்றைய மூவரும் சபைக்கு நேற்று வரவில்லை. எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரே வெளிநாடு சென்றுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுகவீனம் காரணமாக நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அரச தலைவர் தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் பங்கேற்றிருந்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகிய இருவரும் நேற்று நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்காத காரணத்தை அறியமுடியவில்லை.

நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

நாடாளுமன்ற அமர்வு நேற்று முற்பகல் 10.30 மணிக்குக் கூடுவதற்கு முன் அங்கு வருகை தந்திருந்த கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான விவகாரம் தொடர்பில் கூடிப் பேசினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பான விவாதத்தின்போது எதிராக உரையாற்றுவது எனவும், வாக்கெடுப்பின்போதும் எதிராக வாக்களிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன், அமைச்சர் மனோ கணேசன் உட்பட எவரும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.