பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை!

அபாரமான பந்து வீச்சினால் இலங்கை  அணி ஆப்கானிஸ்தானை 34 ஓட்டத்தினால் வீழ்த்தியுள்ளது.

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை குவித்தபோது மழை குறுக்கிட்டது.

இதன் பின்னர் மழை முடிவடைந்ததும் இரவு 8.30 மணியளவில் ஓவர்களின் எண்ணிக்கை 41 ஆக மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆர்மபானது.

எனினும் 182 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 36.6 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனால் டக்வெத் லூவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓட்டங்களில் 187 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

188 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக மொஹமட் ஷாஜத் மற்றும் ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் இருவரும் இணைந்து 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதன் பின்னர் 4.4 ஆவது ஓவரில் ஆப்கானிஸ்தானின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அதன்படி மொஹமட் ஷாஜத் மலிங்கவின் பந்து வீச்சில் திமுத் கருணாரத்னவிடம் பிடிகொடுத்து 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த ரஹ்மத் ஷாவும் 7.5 ஆவது ஓவரில் இசுறு உதானவின் பந்து வீச்சில் மெத்தியூஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

8.4 ஆவது ஓவரில் நுவன் பிரதீப்பின் பந்து வீச்சை எதிர்கொண்ட ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 30 ஓட்டத்துடனும், 12.5 ஆவது ஓவரில் ஹஷ்மத்துல்லா ஷஹதி 4 ஓட்த்துடனும், 13.4 ஆவது ஓவரில் மொஹமட் நபி 11 ஓட்த்ததுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 57 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 6 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் குல்படின் நைப் மற்றும் நஜிபுல்லா ஸத்ரான் ஜோடி சேர்ந்தாடி இலங்கை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.

சிறிது நேரம் தாக்குப் பிடித்த இவர்களின் இணைப்பாட்டத்தினால் ஆப்கானிஸ்தான் அணி 22 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இருப்பினும் 25 ஆவது ஓவருக்காக நுவான் பிரதீப் மீண்டும் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் நான்காவது பந்தில் குல்படின் நைப் 23 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். 

அவரின் ஆட்டமிழப்பையடுத்து வந்த ரஷித் கானும் 26.1 ஓவரில் 2 ஓட்டத்துடன் திஸர பெரேராவின் பந்து வீச்சில் போல்ட் ஆனார் (123-7) பின்னர் வெற்றிவாய்ப்பு இலங்கை பக்கம் திரும்பியது.

தொடர்ந்து களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஸத்ரானையும் மலிங்க 30.4 ஆவது ஓவரில் அற்புதமான யோக்கர் பந்தினால் போல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து 7 ஓட்டத்துடன் வெளியேற்றினார்(136-8).

9 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஹமித் ஹாசனுடன் ஜோடி சேர்ந்தாட ஆரம்பித்த நஜிபுல்லா ஸத்ரான் 31 ஆவது ஓவரின் முடிவில் 43 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க ஹமித் ஹாசனும் 32.4 ஆவது பந்தில் மலிங்கவின் யோக்கரில் சிக்கி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்தரம் பெற்று, 34 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுக்களையும், மலிங்க 3 விக்கெட்டுக்களையும், திஸார பெரேரா 2 விக்கெட்டுக்களையும், இசுறு உதான ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.