படம் அனுப்பியதற்காக சிறையில் தள்ளப்பட்ட தமிழ் இளைஞன்; நிர்க்கதியான குடும்பம்!

முகநூலினூடாக புகைப்படம் ஒன்றை அனுப்பி அச்சுறுத்தியதன்பேரில், ICCPR எனப்படும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் சாசனத்திற்கான சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மேல் நீதிமன்றத்திலேயே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மன்னார் காட்டாஸ்பத்திரி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், முகப்புத்தகத்தின் ஊடாக அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததுடன் புகைப்படம் ஒன்றை தனக்கு அனுப்பியதாக முஸ்லிம் நபர் ஒருவர் மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டிருந்தார்.

இந்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறித்த இளைஞன் பேசாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் தனது முகநூல் கணக்கில் இருந்து ஒரு புகைப்படத்தை அனுப்பியதாகவும், குறித்த புகைப்படம் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் 14ஆம் திகதி, மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டு ஒருமாதத்தை நெருங்கும் நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு தொடுநர் முகப்புத்தகத்தில் அனுப்பபட்ட புகைப்படத்தை இதுவரை மன்றில் சமர்பிக்கவில்லை என்பதன் அடிப்படையிலும் சட்டத்தரணி எஸ்.டினேஸன் ஊடாக குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு கோரி பினை மனுவானது மன்னார் மேல் நீதி மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த இளைஞரின் உழைப்பினை நம்பியதாகவே அவரது வயதான தந்தை உள்ளிட்ட குடும்பம் உள்ளதாகவும் அவரது கைது காரணமாக குறித்த குடும்பம் கஷ்டங்களை அனுபவித்துவருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, 2007ஆம் ஆண்டு 56ஆம் இலக்க சட்டமான ICCPR எனப்படும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் சாசனத்திற்கான சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நபரை, ஒரு நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கமுடியாது. சட்ட மா அதிபரின் ஒப்புதல் அறிக்கையுடனேயே அவரை விடுவிப்பதற்கான அதிகாரம் உள்ளது.

அதனடிப்படையில் சட்ட மா அதிபரின் ஒப்புதல் அறிக்கையோ அல்லது குற்றப்பத்திரிகைத் தாக்கலோ இதுவரை இல்லாத நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ICCPR சட்டத்தின் 3ஆவது பிரிவின் அடிப்படையிலேயே குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செல்வராஜா டினேசன் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தின் 3ஆவது பிரிவின் அடிப்படையில், யாராவது ஒருவர் ஒரு மதம் சார்ந்த அல்லது இனம் சார்ந்த கலவரத்தை தூண்டும் வகையில் செயற்படகூடாது என கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.