அவிஷ்கவின் கன்னி சதத்துடன் 338 ஓட்டங்களை குவத்த இலங்கை!

அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னி சதத்துடன் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 338 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 39 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

குசல் – திமுத் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ஆட்டமிழக்காது சீரான ஓட்ட எண்ணிக்கையை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

அதனால் இலங்கை அணி 10 ஓவரில் ஓட்டத்தையும் 15 ஓவரில் 91 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றது. இந் நிலையில் 15.2 ஆவது ஓவரில் திமுத் கருணாரத்ன மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 32 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, 18.1 ஆவது ஓவரில் குசல் பெரேரா மொத்தமாக 51 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 64 ஓட்டத்துடன் ரன்அவுட் ஆனார் (104-2).

3 ஆவது விக்கெட்டுக்காக குசல் மெண்டீஸ் – அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி சேர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர இலங்கை அணி 25 ஓவர்கள் நிறைவில் 146 ஓட்டத்தையும் 30 ஓவர்கள் நிறைவில் 173 ஓட்டத்தையும் பெற்றது.

31.5 ஆவது ஓவரில் குசல் மெண்டீஸ் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 39 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

தொடர்ந்து மெத்தியூஸ் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க அவிஷ்க பெர்னாண்டோ 33.1 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஆனது.

இதன் பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த மெத்தியூஸ் 39.1 ஆவது ஓவரில் மொத்தமாக 20 பந்துகளில் ஒரு ஆறு ஒட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 26 ஓட்டத்துடன் ஹோல்டரின் பந்து வீச்சில் போல்ட் ஆனார் (247-4).

இலங்கை அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தது. ஆடுகளத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 75 ஓட்டத்துடனும், திரிமான்ன 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதன் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவிஷ்க பெர்னாண்டோ 46.4 ஆவது ஓவரில் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது கன்னி சதத்‍தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 47.2 ஆவது ஓவரில் மொத்தமாக 103 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 104 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (314-5).

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த 338 நிலையில் ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 6 ஓட்டத்துடனும், திரிமான்ன 45 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுக்களையும், பேபியன் ஆலன், உஷேன் தோமஸ் மற்றும் ஷெல்டன ்கொர்ட்ரல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.