ஜனாதிபதியின் இனவாத கருத்தால் சுமந்திரன் சீற்றம்

போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது முற்று முழுதான தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

போதைப்பொருள் வியாபாரம் நடத்த வேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது.

குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். இந்த வரலாறு தெரியாமல் ஜனாதிபதி இப்படி கூறுவது முற்று முழுதான தவறு. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல். இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

என்னதான் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்தாலும் அதனை இலங்கை வாழ் தமிழர்கள் ஏற்பதற்காக இல்லை என்பதே நிதர்சனம்.