நடுக்கடலில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள ஐந்து ஈழத்தமிழர்கள்!

அவுஸ்திரேலியா நோக்கி ஐந்து இலங்கையர்களுடன் வந்துகொண்டிருந்த படகினை அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு படையினர் கடல் நடுவில் மறித்து திருப்பி அனுப்பிருப்பதாக உள்துறை அமைச்சர் பீற்றர் டுற்றன் நேற்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

கடந்த மே மாதம் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு வந்த 20 இலங்கையர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட படகிலிருந்த அனைவரும் ஆண்கள் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் இந்தச்சம்பவம் சரியாக எப்போது நடைபெற்றது போன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.

கடந்த மே மாதம் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்கு வந்துகொண்டிருந்த 41 அகதிகள் ஆபத்தான கட்டத்திலிருந்தபோது, கடலில் மூழ்கி இறந்துவிடாமல் ஆஸ்திரேலிய படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா நோக்கி படகில் வருகின்ற அகதிகளின் விவரங்கள் குறித்து எந்த தகவலையும் பாதுகாப்பு காரணங்களையொட்டி வெளிடப்போவதில்லை என்று உள்துறை அமைச்சு முன்னர் அறிவித்திருந்தபோதும் தற்போது இந்த தகவல்களை நாடாளுமன்றத்திலேயே தெரிவிக்கத்தொடங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.