கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால்…..! எச்சரிக்கும் அமைச்சர்

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறுவாரானல் நாட்டில் மீண்டும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் உட்பட கொடூரங்கள் தலைவிரித்தாடும் என அமைச்சர் ரவீந்திர சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வீசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ராஜபக்ச சகோதரர்களின் கடந்த ஆட்சி எவ்வாறு இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் நாட்டு மக்களை எச்சரித்திருக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“அவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள் என்பதை நாட்டு மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. என்னதான் கூறினாலும் அவர்கள் ஆட்சிக்க வந்தால் மீண்டும் அன்று இருந்த காட்டுச் சட்டமே நடைமுறைக்கு வரும்.

ஏனெனில் ஒட்டுமொத்த நாடும் இரண்டு மூன்று சகோதரர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும்போது, இந்த நாடு எங்கு செல்லும் என்பதை கடந்த காலங்களில் நாம் கண்டோம். அவர்களுக்கு எதிராக கருத்துகூற முடியாது. அவர்களுக்கு எதிராக பத்திரிகைகளில் எழுத முடியாது.

அவர்களுக்கு எதிராக பகிரங்கமாக பேச முடியாது. அவ்வாறு செய்யும் அனைவருக்கும் அவர்கள் பகிரங்கமாக தண்டனை வழங்கினார்கள். 

அதிகாரத்தை கைப்பற்றும் வரை, சிறந்த ஆட்சியை ஏற்படுத்துவதாகவும், அனைவருக்கும் சமமாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் கூறுவார்கள்.

நேற்றைய தினம் முன்னிலைப் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது கோத்தபாய அவர்களை இந்த அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றம்சாட்டினார்.

ஆனால் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். குறைந்தபட்ச கொடுப்பனவைக்கூட வழங்க அவரகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்று அவர்களது ஆட்சியின் போது மேற்கொண்ட செயற்பாடுகளை மறந்து, தற்போது புதிய உலகமொன்றை உருவகப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றார்கள். இதற்க மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று நான் கருதவில்லை.

இதற்கு முன்னர் அவர்களது ஆட்சி இராணுவ ஆட்சியாகவே இருந்தது. அவரும், அவரது சகோதரருமே நாட்டை மீட்டதாக கூறி வருகின்றனர். அத்துடன் அவர்களுடனேயே ஒட்டுமொத்த இராணுவத்தினரும் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

ஆனால் நாட்டை காப்பாற்றிய இராணுவத் தளபதி அவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காக அவருக்கு என்ன செய்தார்கள் என்பதை நாமும், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

முன்னாள் இராணுவத் தளபதி அவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காக அவரின் கால்களை பிடித்து இழுத்துச் சென்றனர். 

இப்படியாக எந்தவொரு ஜனநாயகமும் இல்லாத அவர்களிடமிருந்து ஜனநாயகத்தை எதிர்பார்க்க இந்த நாட்டு மக்களுக்கு முடியாது.

ஆட்சிபீடம் ஏறும் வரை அனைவரையும் நம்பவைப்பதற்காக பல்வேறு கதைகளை அவர்கள் கூறுவார்கள். தேர்தலின் பின்னர் அவர்களின் உண்மை முகத்தை அனைவரும் பார்த்துக்கொள்ளலாம்.

எவ்வாறாயினும் அவர்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்சிக்கு வந்தாலும் கடந்த ஆட்சியில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.