காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) மரணித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வடக்கு கிழக்கில் 922 நாட்களை கடந்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இவற்றில் பங்குபற்றி 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நாகராசா நகுலேஸ்வரன் என்ற மதனைத் தேடி வந்த ஏழாம் வட்டாரம், சிவநகர், புதுகுடியிருப்பைச் சேர்ந்த சின்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெறவுள்ளது. தமது உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்த 900 நாட்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 பெற்றோர்கள் உயிரிழந்துள்ளதுடன், வடக்கு கிழக்கில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.