8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு கடந்த 03ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை – கல்முனை பகுதியில் கடந்த சனிக்கிழமை குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனை அயலவர்கள் அறிந்ததையடுத்து குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்று இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இந்நிலையில் கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தோடு, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு அவர் கல்முனைகுடியைச் சேர்ந்த 8 வயதுடைய பாடசாலை மாணவி என தெரியவந்துள்ளது.