கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா – நடேஸ் குடும்பத்தின் தலைவிதி பல மாதங்களாக முடிவு செய்யப்படாத நிலையில் இருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலிய எல்லைகளை எப்படிப் பாதுகாப்பது என்ற நீண்டகால போராட்டத்தில் வரி செலுத்துவோரின் பல மில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பீட்டர் டட்டன் கூறினார்.

நாடு கடத்தப்படவிருந்த பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான 4 வயது கோபிகா, 2 வயதான தருணிக்கா ஆகியோர், கடைசி நேர தடுப்பு உத்தரவைப் பெற்றதால் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது நேயர்கள் அறிந்த செய்தி.

அந்நாட்டு ஊடக நிறுவன ஒன்றின் தொகுப்பாளர்யுடனான நேர்காணலில், குழந்தைகள் பகடைக் காய்களாக்கப் படுகிறார்கள் என்று பீட்டர் டட்டன் குறிப்பிட்டார்.

இந்த செயற்பாட்டை மற்றைய நாடுகளிலும் தாம் காண்பதாகவும், பிள்ளைகளை வைத்து பொது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதன் மூலம் தமது புகலிடக் கோரிக்கையில் வெற்றி காண்பதை தாம் அவதானித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி கிடைக்காது என்பது அவர்களுக்குப் பல தடவைகள் உணர்த்தப்பட்டது. இருந்தாலும் அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

இலங்கையில் பிறந்த பிரியா மற்றும் நடேஸ் தனித்தனியாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து, திருமணம் செய்து, இங்கேயே இரண்டு குழந்தைகளைப் பெற்று, அதன் பின்னர் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிலோயெலா என்ற நகரில் குடியேறினார்கள்.

இளைய குழந்தை தருணிக்கா, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு பெற தகுதியுடையவரா என்பதை ஃபெடரல் நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை அவர்கள் இப்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகள் பகடைக் காய்களாக்கப் படுகிறார்கள் என்ற கருத்தை இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் நிராகரித்தனர்.

உண்மை என்னவென்றால், நாட்டை விட்டு வெளியேறினால் பின்னர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதை நடேஸின் வீசா நிலவரம் தடுக்கிறது, என்று அவர்களது குடும்ப நண்பர் சிமோன் கேமரூன் கூறினார்.

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்த பின்னர், நாடேஸுக்கு ஒரு இடைக்கால வீசா வழங்கப்பட்டது, அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறவோ ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பவோ அந்த வீசா அனுமதிக்க வில்லை. பீட்டர் டட்டன் சொல்வது பொய்யானது, அது மட்டுமல்ல அது வெறுமனே சாத்தியமற்றது – அமைச்சர் அதை அறிந்து கொள்ள வேண்டும்.

அவர்களது இளைய மகள் புகலிடம் கோர முடியுமா என்ற நீதி மன்றத் தீர்ப்பிற்காக இந்தக் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.

இந்த நீதி மன்றத் தீர்ப்பு வருவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்கிறார் அமைச்சர் பீட்டர் டட்டன்

இது இப்போது இரண்டு மாதங்களுக்கு தொடரும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் வழக்குரைஞர்கள் முயற்சி செய்து நீதிமன்ற விசாரணையைத் தாமதப்படுத்துவார்கள். அது அவர்களுடைய தந்திரோபாயத்தில் ஒன்று என்று அவர் மேலும் கூறினார்.

அவர்கள் தாமதப்படுத்தப் படுத்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும், அதனால் நாம் மனதை மாற்றுவோம் என அவர்கள் நினைக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்.

குழந்தைகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது குறித்து, முதன் முதலில் கடந்த வாரம், அந்நாட்டிலுள்ள மற்றொரு வானொலி நேர்காணலின் போது Labor கட்சியின் உள்துறைக்கான பேச்சாளார் Kristina Keneally கேள்வி எழுப்பினார்.

இது மிகவும் வெளிப்படையாக, ஒரு அமெரிக்க விவாதத்தின் இறக்குமதி ஆகும். அமெரிக்காவில் சட்டம் மிகவும் வித்தியாசமானது, அங்கு அமெரிக்க மண்ணில் பிறந்த எவருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது, என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் அப்படியான சட்டம் இல்லை, எனவே அப்படி பேச வேண்டிய அவசியம் இங்கு இல்லை.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், பிலோயெலா மக்கள் மட்டுமல்ல, பரவலாக அனைத்து ஆஸ்திரேலியர்களும் இந்தக் குடும்பத்திற்கு ஆதரவு வழங்குகிறார்கள். அவர்கள் இந்த சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

வெறுமனே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் செயல் அல்ல, என்று அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது என்று பீட்டர் டட்டன் வலியுறுத்துகிறார்.

இவர்கள் விண்ணப்பங்களை மிக உன்னிப்பாக நாம் ஆராய்ந்தோம். இவர்கள் அகதிகள் அல்ல, என்கிறார் அவர்.

அவர்களைப் போல் 6,000 பேர் உள்ளனர், அவர்களுக்கும் இதே போன்ற குடும்ப அமைப்புகள் உள்ளன.

இவர்களுக்கு ஆம் என்று சொல்லி விட்டு, எப்படி 6,000 பேருக்கு இல்லை என்று சொல்வது?