இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த திங்கட்கிழமை(16) தொடக்கம் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெருந் தொகையான பயணிகள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

போக்குவரத்துச் சபை ஊழியர்களின் இப்பணிப் பகிஷ்கரிப்பால் பெருந்தொகையான பயணிகள், பஸ் தரிப்பு நிலையத்தில் நிறைந்து காணப்படுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம், தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தொடரவுள்ளதாக, போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.