இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்கள் தொடர்பாக இராணுவத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு எதிராக, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டின் 12ம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்கு விதி இல. 07 படி, கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளரால், இறுதி யுத்தத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திடம் ​கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இறுதி யுத்தத்தின்போது புலிகள் இராணுவத்திடம் சரணடையவில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள் என இராணுவம் பதிலளித்திருந்தது.

அத்துடன், இது தொடர்பான தகவல்களை புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இராணுவத் தரப்பில் இருந்து பதிலளித்திருந்தது.

எனினும், இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பதால், இது தொடர்பில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் இன்று மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.