நூதன யுகத்தில் எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற எதிராபாரா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக இராணுவத்தைப் பலப்படுத்தப்போவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் இணைப்புப் பாலமாக இராணுவப் படையினரை அடையாளப்படுத்திய அவர், போர் இடம்பெற்ற தமிழர் பகுதிகளிலும் படையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே சிறந்த நட்புறவு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இராணுவத்தின் 70வது நிறைவாண்டு விழா இன்றைய தினம் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இராணுவத்தின் தலையாயக் கடமையான நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்பு செய்வோம். அதனூடாக அச்சம், சந்தேகமின்றிய சமூகத்தைக் கட்டியெழுப்ப சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதற்கமைய நாடு என்ற வகையில் எதிர்பார்க்க முடியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான அறிவு, திறமை, தொடர் பயற்சியின் ஊடாக எமது படையினரை பலப்படுத்த வேண்டும்.

அதற்காக படையினர் அனைவரும் தயாராகவும் வேண்டும். நூதன யுகத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை அடையாளங் கண்டுகொள்ளவும், அவற்றிற்கு எதிர்கொள்ளவும் பலம்வாய்ந்த இராணுவத்தை அமைப்பதே எனது விசேட நோக்காக உள்ளது.

இராணுவத்தினரின் நலன்புரி விடயங்களையும், தொழிற்துறை நலன்களையும் அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கின்றேன்.

நாட்டிற்குள் ஏற்படுகின்ற எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களின்போது நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபடவும் மக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவரவும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் வழங்கப்படுகின்ற அர்ப்பணிப்புச் சேவையை பாராட்டுகின்றேன்.

அவற்றை தொடர்ந்தும் அமுல்படுத்தவும் எதிர்பார்க்கின்றேன். ஒட்டுமொத்த மக்களும் சகோதரத்துடனும், நாட்டின் பாதுகாப்பிற்காக இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற இணைப்பு முனையாக எமது படைத் தலைமை அதிகாரிகளை சுட்டிக்காட்டலாம்.

எமது படையினர் சிவில் மக்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகின்றனர்.

போர் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றல் மற்றும் சுகாதார சேவைகளுக்காக வைத்தியசாலை நிர்மாணம், வீடுகள் நிர்மாணம், வடிகாலமைப்பு, குருதிக்கொடை மற்றும் சிரமதானங்கள் ஆகிய பணிகளின் ஊடாக சிவில் மக்களுடன் பலமான நட்புறவைக் கட்டியெழுப்ப எங்களால் முடிந்தது’)