யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கையில் சலசலப்புக்களை ஏற்படுத்த ஊடங்கள் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் இணைந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை திறப்பதனை பயன்படுத்தி தென்னிலங்கையின் பல சிங்கள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் இனவாதத்தை தூண்டிவிட ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கள மொழிக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அந்த ஊடகங்களில் வெளியாகியதனை போன்று எவ்வித சர்ச்சை ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் பக்கங்கள், ஊடகங்கள் இனவாதத்தை தூண்டிவிடுவதற்காக இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக குறிப்பிடப்படுகின்றது. ஊடகங்களின் மிகவும் மோசமான செயல் இதுவென சில சிங்கள ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

சில சிங்கள ஊடகங்கள் நாட்டின் அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரச மொழிகள் தொடர்பில் ஆக்கபூர்வமான அறிவினை கொண்டிருக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பிற்கு அமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழி அரச மொழியாகும். அத்துடன் இரண்டிற்கும் சமமான பெறுமதியே உள்ளது. அத்துடன் வடக்கு பகுதிகளில் நிர்வாக மொழி தமிழ் என்பதனை கூட பலர் அறியாமல் உள்ளனர்.

அதற்கமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதன்மை இடம் வழங்குவதில் எந்தவொரு இனவாத செயற்பாடும் இல்லை.

யாழ்ப்பாணம் பெரும்பான்மையாக தமிழ் மக்களின் பகுதி என்பதனால் இது ஒரு நியாயமான செயல் என்பதனால், அதில் இனவாதத்தை தூண்டிவிட வேண்டாம் என நடுநிலையான சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.