ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பஹ்தாதி உயிரிழந்துள்ளார்.

இன்று அமெரிக்கப்படைகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், அவர் தன்னைத்தானே வெடிக்க வைத்து உயிரிழந்தார்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எல் தலைவர் குறிவைக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார். நடவடிக்கை தொடங்கியதுமே அமெரிக்க அதிகாரிகள் விடயத்தை கசிய விட்டிருந்தனர். அல் பஹ்தாதியின் இருப்பிடம் பற்றிய உறுதியான தகவல்கள் இருந்ததாலேயே, அவ்வளவு உறுதியாக பேச முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வெள்ளை மாளிகையில் ஒரு முக்கிய அறிவிப்பு செய்ய திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லி சனிக்கிழமை தெரிவித்தார்.

கிட்லி மேலதிக விபரங்களை வழங்கவில்லை.

ட்ரம்ப் சற்று முன்னர் ட்வீட் செய்ததாவது: “மிகப் பெரிய ஒன்று இப்போது நடந்தது!”

JSOC என அழைக்கப்படும் அமெரிக்காவின் கூட்டு சிறப்பு செயல்பாட்டு கட்டளை படை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறுகிறது.

“ஜே.எஸ்.ஓ.சிக்கு கிடைத்த உளவுத்தகவல்களின் அடிப்படையில், இட்லிப் மாகாணத்தின் ஒரு வளாகத்தை சுற்றிவளைத்தனர். இதன்போது ஒரு நபர் தற்கொலை உடையை வெடிக்கச் செய்தார். அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் இது அல்-பாக்தாதி என்று நம்புகின்றன” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.