40வது சதம் விளாசிய விராட் கோஹ்லி!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி இந்திய அணி களமிறங்கி விளையாடியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு பக்க பலமாக தமிழக வீரர் விஜய் ஷங்கர் 41 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிதளவில் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆன நிலையில், மறுபுறம் விராட் கோஹ்லி நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார்.

அரைசதம் கடந்த விராட் கோஹ்லி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 40வது சதத்தை பதிவு செய்தார். தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் 2வது இடத்தில் உள்ள கோஹ்லி, முதல் இடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கரின்(49 சதங்கள்) சாதனையை முறியடிக்க இன்னும் 10 சதங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா 21 ஓட்டங்களில் வெளியேறிய நிலையில், அணியின் ஸ்கோர் 248 ஆக இருந்தபோது கோஹ்லி 120 பந்துகளில் 116 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆனதால், இந்திய அணி 48.2 ஓவரில் 250 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அவுஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.