இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றம்!

0
204

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபையில் 29 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 16வது பொது அமர்வின் போது இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினைக் கோருதலும், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தலும் என்ற அடிப்படையிலான தனிநபர் பிரேரணை மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலனால் கொண்டுவரப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்களும், மனித நேயக் குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கும், தமிழ் மக்களுக்கான தீர்வினை இதுவரையில் வழங்கத் தவறியுள்ளமையாலும், கடந்த கால வன்முறைகள் மீளெழுவதைத் தடுப்பதன் பொருட்டு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளமையாலும் ஓர் நிலையான அரசியல் தீர்வினைக் காண்பதை நோக்காகக் கொண்டும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிப்பதன் பொருட்டும் இத்தீவின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை கோருவதாக இப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது குறித்த பிரேரணையை நிறைவேற்றும் வகையில் மாநகர சபை முதல்வரினால் வாக்கொடுப்பிற்கு விடப்பட்டது. வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 17, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் 05, தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 04, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவர், சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 03, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 04, சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் இதன்போது நடுநிலைமை வகித்தனர்.

இதனைத் தொடர்ந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி 29 வாக்குகளால் இந்த பிரேரணை மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வரும் 20ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராயப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here