வவுனியாவில் சட்டவிரோத சீனிப்பாணி தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை!

வவுனியாவில் இன்று அதிகாலை 5.00மணியளவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதில் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையிலிருந்த 116 சீனிப்பாணிப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல் ஒன்றினடிப்படையில் ஓமந்தை சுகாதாரப்பரிசோதகர், நொச்சிமோட்டை சுகாதாரப்பரிசோதகர் கூட்டாக இணைந்து வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகதர் தலைமையில் சமயபுரம் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத தேன் உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது சீனிப்பாணியை தேன் என்று தெரிவித்து 116 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி மலையகப்பகுதிகளில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு உற்பத்தியாளரின் பெயர் விபரங்கள் திகதியிடப்பட்ட சுற்றுத்துண்டுகள் ஒழுங்கு முறைப்படி காணப்படாத எந்தவொரு தேன் போத்தல்களையும் அல்லது உணவுப் பொருட்களையும் பொதுமக்கள் கொள்வனவு செய்யவேண்டாம். இவ்வாறு சீனிப்பாணியை தேன் என்று தெரிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பல சட்டவிரோத போத்தல்கள் எங்களால் கைப்பற்றப்பட்டுள்ளது தேன் கொள்வனவு செய்யும்போது உற்பத்தியாளரின் சுற்றுத்துண்டு இல்லாத பொருட்களை கொள்வனவு செய்யவேண்டாம். என்று பொது மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

உரிய சுகாதார முறைப்படி மேற்கொள்ளப்படாமல் சொப்பின் பையில் இட்டு மோட்டார் சைக்கிளில் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பாண் பனிஸ் கடதாசிப் பையில் வேறு தேவைகளுக்குப்பயன்படுத்திய பாண் பெட்டியிலிருந்த உரப்பை என்பனவும் இன்று காலை மரக்காரம்பளை வீதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் குறித்த நபரின் பாண் பெட்டியைக் கைப்பற்றி திருத்தவேலைகள் மேற்கொள்வதற்காக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது இதனையும் கருத்திற்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக சுகாதார விதிமுறைகளுக்கு அற்ற முறையில் உணவுப்பண்டங்களைத் தொடர்ந்தும் விற்பனை செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு இன்றைய தினம் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சட்டவிரோத தேன் உற்பத்தி நிலைய உரிமையாளருக்கு எதிராகவும் பாண் விற்பனைக்கு எடுத்துச் சென்ற விற்பனையாளருக்கு எதிராகவும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.