சற்றுமுன்னர் பூகொடையில் குண்டு வெடிப்பு!

பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று மாலை மற்றும் இரவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரப்பனையில் 4 பேரும், ரக்வானையில் மூன்று பேரும், வவுணதீவு மற்றும் மீகலேவ பகுதிகளில் தலா இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனுடன் பண்டாரகம, பலாங்கொட, மாத்தளை, தெல்தெனிய, வத்தளை பகுதிகளளில் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகமயில் கைது செய்யப்பட்டுள்ளவர், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உதவி போக்குவரத்து பரிசோதகராக கடமையாற்றியவர் என தெரிவித்துள்ள காவல்துறை காவல்துறை  பேச்சாளர், அவரின் பேஸ்புக் கணக்கில் தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற பதிவு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் திரப்பனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் வத்தளையில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து இரண்டு வோர்க்கி டோக்கி கருவிகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.