இலங்கையில் தங்கத்திற்கு ஏற்பட்ட நிலை! கடும் அதிருப்தியில் நுகர்வோர்

116
விளம்பரம்

இலங்கையில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் நன்மைகளை நுகர்வோருக்கு தற்போதைய சூழ்நிலையில் வழங்க இயலவில்லை என்று அகில இலங்கை தங்க நகை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை தங்க நகை வர்த்தக சங்கத்தின் பொருளாளர் இரா. பாலசுப்ரமணியம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையேற்றம் மற்றும் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பிலான முறையான திட்டம் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் தங்கத்தின் விலையை தற்போதைக்கு குறைக்க முடியாதுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் ஓரளவேனும் தங்கத்தின் விலையை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, தெற்காசியாவிலேயே தங்கத்தின் விலை குறைவாக காணப்படுகிற நாடு இலங்கை என அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், தெற்காசியாவில் தங்கத்தின் விலை மிகவும் குறைந்த நாடாக இலங்கை காணப்படும் என இரா. பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இலங்கை தங்க நகை செய்பவர்களால் தயாரிக்கப்படும் தங்க ஆபரணங்களுக்கு சர்வதேச சந்தையில் பாரிய கேள்வி காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ள 15 சதவீத தங்க இறக்குமதி வரியினால், தங்கத்தின் விலையை உடனடியாக குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். கணேஷ மூர்த்தி தெரிவிக்கின்றார்.

அதுமட்டுமின்றி தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக குறைய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கம் வர்த்தகர்களை நோக்காக கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், நுகர்வோர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், தங்க வர்த்தகர்களின் விற்பனை பாதிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இவ்வாறு தங்க வர்த்தகர்களுக்கு ஏற்படும் விற்பனை பாதிப்பானது, தற்காலிகமான ஒன்று என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். கணேஷ மூர்த்தி தெரிவிக்கின்றார்.

விளம்பரம்
முந்தைய கட்டுரைகொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் தப்பி ஓட்டம்: வவுனியாவில் பதற்றம்
அடுத்த கட்டுரைகண்டி – திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நில அதிர்வு