எம்மில் பலர் அலுவலகத்தில். இல்லத்தில்.பாடசாலையில். வணிக வளாகங்களில். என எங்கு இருந்தாலும் பதற்றத்துடனே காணப்படுவார். அவர்கள் மற்றவர்களுடன் பேசும்பொழுது அந்த பேச்சில் தடுமாற்றம் இருக்கும். 

அவர்களுக்கு நா வறண்டு போகும். இனம்புரியாத பய உணர்வு அடிக்கடி எழும். மேலும் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும். அவர்களின் இதயத்துடிப்பு தொடர்பே இல்லாமல் இயல்பான வேகத்தைவிட அதிக அளவில் துடிக்கும். 

சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். சிலருக்கு மயக்கம் வருவதுபோல் தலைசுற்றும். திடீரென்று அவர்கள் உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறும். வாந்தி எடுப்பது போன்ற உணர்வும் ஏற்படும். இரவில் உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டு இருப்பர். இத்தகைய அறிகுறிகள் உங்களில் யாருக்கேனும் ஏற்பட்டால் அவர்கள் பதட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

இவர்களின் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனாலும் மேற்கண்ட அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு தாங்கள் பதட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் மட்டும் தான், அதனை உணர்வார்கள்.

இவர்களுக்கு சாதாரண பொது மருத்துவர்களை விட, மனநல மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவை, சிறிது காலகட்டத்திற்கு மனநல ஆலோசனையை மேற்கொண்டால், அவர்கள் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம். அத்துடன் அவர்கள் தங்களுக்கு பதட்ட நோய் இருக்கிறது என்பதையும், அது அடிக்கடி தொல்லை கொடுக்கிறது என்பதையும் உணர்வார்கள்.

இத்தகைய பதட்ட நோய் ஏற்படுவதற்கு உடலில் தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் தான் காரணம் என மனநல நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

மனதை இயல்பாக வைத்துக் கொண்டிருப்பது அல்லது மனம் எத்தகைய செயல்களில் ஈடுபடும் போது உற்சாகமாக இருக்கிறீர்களோ அத்தகைய பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது, சீரான ஓய்வு, உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றில் பயிற்சி செய்வது… இதனை நிரந்தரமாக தடுக்கும் உபாயமாகும். ஆனால் பதட்ட நோய் அறிகுறி உள்ளவர்கள் போதைப்பொருள் பாவனை செய்யும் பழக்கம் இருந்தால், அவர்கள் அதிலிருந்து விடுபடுவது கடினம். இதற்கு அவர்கள் போதைப்பொருளை பாவனை செய்வதை தவிர்க்க வேண்டும். அதன்பிறகு மனநல ஆலோசனையையும், மன நல மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் பிறகு அவர்கள் அந்த பதட்ட நோயிலிருந்து மெல்ல விடுபடுவார்கள்.

டொக்டர் ராஜ்மோகன்.