பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களால் டிசம்பர் 22ம் திகதி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் டெல்லி பொலிஸிக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமரின் பாதுகாப்பிற்காக நீல புத்தகத்தில் உள்ள வழிமுறைகளை அமல்படுத்துமாறு புலனாய்வு அமைப்புகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளது.

புது டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடியைத் தாக்க ஜெய்ஷ்-முகமது தீவிரவாத குழு உறுப்பினர்கள் அணிதிரட்டப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நேரத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளும் மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை அனுமதிக்கும் புதிய சட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளன.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (டிசம்பர் 12), ராம் ஜன்ம பூமி தீர்ப்பு (நவம்பர் 9) மற்றும் 370 (ஆகஸ்ட் 5) சட்டத்தை ரத்து செய்தல், அதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்குள் இராணுவமற்ற பகுதிகள் மீது இந்திய விமானப்படையால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் ஆகியவை அச்சுறுத்தல் சூழ்நிலைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளன என புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.