இலங்கைக்கு சென்ற பிரபல திரைப்பட இயக்குனர் களஞ்சியம் விமானத்தில் மோசமாக நடத்தப்பட்டதோடு ராணுவத்தின் தாக்குதலால் காயங்களோடு இந்தியா திரும்பியிருக்கிறார்.

தமிழில் பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளவர் களஞ்சியம்.

இவர் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார்.

அங்கு ராணுவத்தினரால் காயமடைந்து இந்தியா திரும்பியிருக்கும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து களஞ்சியம் விகடனுக்கு அளித்த தகவலில், இலங்கையில் நடந்த நிகழ்ச்சியின் போது, ராணுவத்தை சேர்ந்த சிலர் நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என மிரட்டினர்.

பின்பு நான் கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வந்தபோது, இலங்கை ராணுவத்தினர் என்னைப் பின்தொடர்ந்து வந்தனர்.

அப்போது வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்கேஷ்வரன் நீங்கள் இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, உடனே கிளம்புங்கள் என்றார்.

பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக விமானத்தில் கிளம்பினேன்.

ஆனால், திருகோண விமான நிலையத்தில் என்னை மட்டும் இறக்கிவிட்டார்கள்.

பின்பு ஒரு மணிநேரம் கழித்து இலங்கை ராணுவத்தினர் என்னிடம் வந்து, உன் தலைவன் யார். நீ எங்கிருந்து வருகிறாய்? எனப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கு நான் எனக்குத் தலைவன் என யாரும் கிடையாது என்றேன்.

அப்போது, 2016-ல் நான், சீமான், வேல்முருகன் ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி நீ என்ன சீமான் கட்சியா என ஒரு அதிகாரி பேசிக் கொண்டிருக்கும் போதே, எனக்குப் பின்னால் இருந்த ஒருவர் அவர் வைத்திருந்த துப்பாக்கியால் என்னைக் கடுமையாகத் தாக்கினார்.

இதில் எனது பல் மற்றும் கழுத்து எலும்பு உடைந்தது. நான் வலியால் துடித்தும் விடாத அவர்கள் 5 மணிநேரம் என்னை கடுமையாக அடித்தார்கள்.

பின்னர், சிறு விமானத்தில் என்னை ஏற்றி அனுப்பினார்கள்.

அந்த விமானத்தில் இரத்த காயத்தோடு இங்கு வந்தேன் என கூறியுள்ளார்.