காஷ்மீர் எல்லையின் இருவேறு இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்!

3

ஜம்மு காஷ்மீர் எல்லையின் இருவேறு பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம்  அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் உட்பட 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு  இரத்து செய்தது முதல் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத  ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதல் சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன.

இதனை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இதனிடையே கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய  நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய  இராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியான உரி  மற்றும் பாண்டிபோரா குப்வாரா பகுதிகளில் இன்று பாகிஸ்தான் இராணுவம்  அத்துமீறி ஷெல் தாக்குதல் நடத்தியது.

இதில் உரியில் நம்ப்லா செக்டரில்  பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இராணுவ வீரர்களும் ஹாஜி பீர் துறையில் ஒரு எல்லை பாதுகாப்பு படை துணை ஆய்வாளரும்  உயிரிழந்தனர்.

இதேபோல் பாரமுல்லா மாவட்டத்தின் உரி மற்றும்  பால்கோட்  பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3  பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே தற்போது இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.  இதுவரை இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள்  கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.