கூட்டமைப்பின் பிளவுக்கு ஊழலே காரணம்- கருணா

கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டமைக்கு ஊழலே முக்கிய காரணமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வாழைச்சேனை- பேத்தாழை பிரதேசத்தில் நடைபெற்ற அரசியல் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலஞ்சம் வாங்கியுள்ளனர். அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளது. இது நாங்கள் சொல்லவில்லை அவர்கள் தான் சொல்கின்றார்கள்.

கடந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க இரண்டு கோடி வழங்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கொழும்பில் போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டதாகவும், இதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதினைந்து கோடி ரூபாய் பெறுமதியான சொத்தை எனக்கு எழுதி வழங்க வேண்டும் என்று கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் கூறினார்.

இவ்வாறு ஊழல் நிறைந்த கட்சியாக மாறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்கின்ற கட்சியாக மாற்றமடைந்துள்ளது. இதன் பலன்தான் கட்சி சிதறிக் காணப்படுகின்றது. இதன் காரணமாக நாங்கள் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தோம்.

எமது மக்கள் நல்ல நிலைமைக்கு வரும் வரைக்கும் எங்களது குரல் ஒழித்துக் கொண்டு இருக்கும். இடைக்கால அரசாங்க காலத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு மற்றும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டங்கள் மாத்திரம் நடைபெறும்” என்றார்.