கோடீஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி ஆசனம் வழங்கக் கூடாது- செல்வம் எம்.பி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி ஆசனம் வழங்கக்கூடாது என ரெலோவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கணேசபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் கோடீஸ்வரன் தமிழரசு கட்சியில் போட்டியிடுவதற்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். இதன் மூலமாக கோடீஸ்வரன் தொடர்ந்தும் எமது கட்சியில் இருக்க முடியாது.

அதேவேளை, தமிழரசுக் கட்சியும் ஒரு பங்காளிக் கட்சி என்ற ரீதியில் கோடீஸ்வரனுக்கு ஆசனம் வழங்குவது என்பது ஜனநாயக மீறலாகும். மூன்று கட்சிகள் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகம் பேணப்பட வேண்டும்.

குறிப்பாக மக்களின் ஜனநாயகத்திற்காக உழைக்கின்ற நாம் எமக்குள் ஜனநாயகத்தைப் பேண வேண்டும். ஆகவே தமிழரசுக் கட்சி கோடீஸ்வரனுக்கு ஆசனம் வழங்குமாக இருந்தால் நாம் அதை எதிர்ப்போம்” என்று குறிப்பிட்டார்.