தமது சொந்த மண்ணில் பத்து வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியினர் வெற்றியீட்டி தமது தேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இலங்கைக்கு எதிராக கராச்சியில் இன்று நிறைவுபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 263 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு  மற்றும் ஐ.சி.சி. வல்லவர் தொடர்களை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக் கொண்டது.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 212 ஒட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 16 பந்துகளில் மேலதிக ஓட்டம் எதுவும் பெறாமல் தனது எஞ்சிய 3 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

நசீம் ஷாவினால் இன்று காலை வீசிப்பட்ட முதலாவது பந்தில் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்த லசித் எம்புல்தெனிய ஓட்டம் பெறாமல் ஆடடம் இழந்தார்.

அடுத்த ஓவரில் யாசிர் ஷாவின் பந்துவீச்சில் அசாத் ஷபிக்கிடம் பிடிகொடுத்த ஓஷத பெர்னாண்டோ 102 ஓட்டங்களுடன் வெளியேறினார். தனது நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஓஷத பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.

மேலும் ஒரு ஓவர் கழித்து நசீம் ஷாவின் பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிக்க பாகிஸ்தான் மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றது.

தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இப் போட்டியில் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பெற்றார்.

இந்த வெற்றியை அடுத்து ஐ.சி.சி. டெஸ்ட் வல்லவர் தொடர் புள்ளிகள் பட்டியலில் 80 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இலங்கையும் 80 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதிலும் நான்காம் இடத்தில் உள்ளது.

எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 1ஆவது இன்: 

சகலரும் ஆட்டமிழந்து 191 (அசாத் ஷபிக் 63, பாபர் அஸஷாம் 60, ஆபித் அலி 38, லஹரு குமார 49 – 4 விக்., லசித் எம்புல்தெனிய 71 – 4 விக்.)

இலங்கை 1ஆவது இன்: 

சகலரும் ஆட்டமிழந்து 271 (தினேஷ் சந்திமால் 74, டில்ருவன் பெரேரா 48, தனஞ்சய டி சில்வா 32, திமுத் கருணாரத்ன 25, ஷஹீன் ஷா அப்றிடி 77 – 5 விக்., மொஹமத் அபாஸ் 55 – 4 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: 

555 – 3 விக். டிக்ளே (ஆபித் அலி 174, ஷான் மசூத் 135, அஸார் அலி 118, பாபர் அஸாம் 100 ஆ.இ., லஹிரு குமார 139 – 2 விக்., லசித் எம்புல்தெனிய 193 – 1 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 

சகலரும் ஆட்டமிழந்து 212 (ஓஷத பெர்னாண்டோ 102, நிரோஷன் திக்வெல்ல 65, ஏஞ்சலோ மெத்யூஸ் 19, நசீம் ஷா 31 – 5 விக்., யாசிர் ஷா 84- 2 விக்.)