கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஐ.பி.எல். தொடரைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே எதிர்ப்பை பதிவு செய்தன.

அத்தோடு, வெளிநாட்டு சுற்றுலா விசாவுக்கு மத்திய அரசு ஏப்ரல் 15ஆம் திகதி வரை தடைவிதித்துள்ளதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐ.பி.எல். இன் உயர் நிர்வாகம் ஆகியோர் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தின் பின்னர் இந்த முடிவினை உத்தியோகபூர்வமாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.