பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் அதிரடி: மும்பை அணியை துவம்சம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

0

பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் இருவரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்து களமிறங்கியது.

இஷான் கிஷன் 36 பந்துகளில் 37 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். குவின்டன் டி காக் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 40 ஓட்டங்கள் சேர்த்து அசத்தினார். மறுமுனையில் சௌரப் திவாரி 34 ஓட்டங்கள் விளாசினார்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹார்திக் பாண்டியா 21 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசி 60 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்கள் எடுத்தது.

196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.

ராபின் உத்தப்பா 13 ஓட்டகள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 11 ஓட்டங்கள் மட்டும் சேர்த்தார்.

அடுத்துக் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் இணை மும்பை பந்துவீச்சை சிதறடித்தனர்.

பென் ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

மறுமுனையில் சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 196 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.