முதல் ஓவரின் முதல் பந்திலே மிரட்டல்! 5-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்த மும்பை

20

டெல்லி அணிக்கெதிரான இறுதி போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன் படி டெல்லி அணிக்கு துவக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், தவான் ஆகியோர் களம் இறங்கினர்.

மும்பை அணிக்கு முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதல் பந்தை சந்தித்தார். டிரென்ட் போல்ட் வீசிய முதல் பந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டோய்னிஸ் பேட்டை உரசி கீப்பரிடம் செல்ல, டெல்லி அணி ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அடுத்து வந்த ரகானே 3-வது ஓவரின் 4-வது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பிய தவான் ஜெயந்த் ஜாதவ் சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி 22 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இதனால் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதுவரை சரியாக விளையாடாத ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அப்போது டெல்லி அணி 15 ஓவரில் 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த ஹெட்மையர் 5 ஓட்டங்களில் ஏமாற்றம் அடைந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தாலும், கடைசி கட்ட ஓவர்களில் டெல்லி அணியால அதிரடியாக விளையாட முடியவில்லை.

6-வது ஓவரில் 7 ஓட்டங்களும் , 17-வது ஓவரில் 11 ஓட்டங்களும், 18-வது ஓவரில் 6 ஓட்டங்களும், 19-வது ஓவரில் 6 ஓட்டங்களும், கடைசி ஓவரில் 8 என அடிக்க, இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் அடித்தது.

ஷ்ரேயாஸ் அய்யர் 50 பந்தில் 65 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதன் பின் 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக குயிண்டன் டி காக், ரோகித் சர்மா களமிறங்கினர்.

இந்த ஜோடி ஆரம்பத்தில் இருந்தே டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டி காக் 12 பந்தில் 20 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 20 பந்தில் 19 ஓட்டங்கள் என வெளியேற, மறுபுறம் தனி ஒருவனாக டெல்லி அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.

அதன் பின் அவர் 68 ஓட்டங்களில் வெளியேற, இறுதியாக மும்பை அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை 5-வது முறையாக கைப்பற்றியது.