வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மீது ஈபிடிபி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து இன்று (02) யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்திருந்த பதாகைகளை ஈபிடிபி கட்சியை சேர்ந்த ஒருவர் பறித்தெடுக்க முயற்சித்தார் என்று யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க முடியாதவாறு மிக சத்தமாக அவர்களுடைய கட்சி பாடலையும், டக்ளஸ் தேவானந்தாவினுடைய உரையையும் ஒலிக்கவிட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டனர் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.