நடிகர் ரஜினிகாந்த்திடமிருந்து விசா விண்ணப்பம் எதுவும் கிடைக்கவில்லை என்று, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது, இலங்கை தமிழர்களின் நிலைமையை நேரில் வந்து பார்க்குமாறு ரஜினிக்கு சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்ற ரஜினி, இலங்கைக்கு விஜயம் செய்ய விசா விண்ணப்பம் செய்திருந்ததாகவும் அது இலங்கை அரசினால் நிராகரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

எனினும், ரஜினிகாந்த் விசா விண்ணப்பம் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய் என கூறியுள்ள அவர், ரஜினியிடமிருந்து விசா கோரிக்கை வந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.