நிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம் நிறைவடையவுள்ளது. அதற்கமைய குறித்த காலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் கோரப்பட்டிருந்தது.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ், 2009ஆம் ஆண்டின் 58 இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலும் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இந்நிலையில், புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக இதுவரையில் 77க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கமைய ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற புதிய கட்சிகளை பதிவு செய்யும் விண்ணப்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஒரு அரசியல் கட்சியானது 4 வருடங்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா என்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.