புதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளது. அதனால் எமது புதிய கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள வாரவெளியீடொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தவறி இருக்கின்றனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்குப் பதிலாக அவர்களின் சொந்த தேவைகளையே நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வந்திருக்கின்றனர். அதனால் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதி விரக்தியடைந்திருக்கின்றனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் தமிழ் மக்களின் எந்தத் தேவையையும் நிறைவேற்றிக்கொடுக்க முடியாது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் பல கோரிக்கைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற கூட்டமைப்பு வெற்றிகரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தவறியுள்ளது. அதனால்தான் வடக்க, கிழக்கு மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் புதிய கூட்டணி ஒன்றை அமைத்திருக்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலின்போது தயாரிக்கப்பட்ட பிரதான 13 கோரிக்கைகளை அடிப்படையாகக்கொண்டே கூட்டணி அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த 13 கோரிக்கைகளையும் பிரதான இரண்டு வேட்பாளர்களும் அன்று நிராகரித்திருந்தனர்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் 5 கட்சிகளில் 2 கட்சிகள் தற்போது எம்முடன் இருக்கின்றன. அதனால் எமது கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும், என்று குறிப்பிட்டுள்ளார்