துருக்கியின் FETO தீவிரவாதிகளின் வருகை இலங்கையில் இருப்பதாக துருக்கி இலங்கைக்கு அறிவித்த போதும் அது கருத்திற்கொள்ளப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2016ஆம் ஆண்டு துருக்கியின் வெளியுறவு அமைச்சு கடிதம் மூலம் இந்த விடயத்தை இலங்கைக்கு தெரியப்படுத்தி இருந்ததாக வெளியுறவு அமைச்சின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மஹேஷா பாரத்தி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள துருக்கியின் தூதுவர் 121 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை 2016 ஆகஸ்ட் 24ஆம் திகதியன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பியிருந்தார்.

அதில் துருக்கியின் FETO தீவிரவாதிகள் இலங்கைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆணைக்குழுவின் முன் பிரசன்னமாகியிருந்த வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்த கடிதம் கிடைக்கப் பெற்றதாக கூறினார்.

அந்தவேளையில் தற்போதைய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கவே வெளியுறவு செயலாளராக இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது பிரதி வெளியுறவு அமைச்சராக இருந்த வசந்த சேனாநாயக்க இது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்ட போதும் பின் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது ஏன் என்று இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழு கேள்வி எழுப்பியது.

இதேவேளை துருக்கியில் இருந்து அனுப்பப்பட்ட இந்தக்கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைத்ததாக அந்த அமைச்சின் சட்டம் ஒழுங்கு பிரிவின் மேலதிக செயலாளர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.