புத்தளம், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீள அறிவிக்கும் வரையில் அமுலில் இருக்கும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.

 நேற்றைய தினம் புத்தளம் பொலிஸ் தொகுதியில் 18 இடங்களிலும், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தினோம்.

இன்றும் அதேபோன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அறிவிக்கும் வரையில் நடைமுறையில் இருக்கும்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை பொலிஸில் பதிவுசெய்யுமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 8,437 பேர் இன்று பிற்பகல் வரையில் பதிவு செய்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய அளவு பங்களிப்பு செய்பவர்கள் வெளிநாட்டவர்கள், அவர்கள் தொடர்பில் கொரோனா வைரஸ் குறித்து தேவையற்ற வகையில் நடந்துகொள்ளவேண்டாம்.

கொரோனா வைரஸை அவர்கள் வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டு இங்கு வரவில்லை. அவர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நாட்டு மக்கள் செயற்படக்கூடாது.

கொரோனா வைரஸ் இருக்கும் என்று அறிந்தால் அது குறித்து எமக்கு அறிவிக்க முடியும். நாட்டில் தற்பொழுது வெள்ளையர்களைக் கண்டால் அவர்கள் கொரோனா தொற்று அச்சுறுத்தலைக் கொண்டவர்கள் என்று கருதி எமக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர்.

நேற்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெள்ளையர் ஒருவர் பயணித்துள்ளார், உடனடியாக ஒரு நபர் அவர் குறித்து வெள்ளையர் ஒருவர் வருவதாக எமக்கு தொலைபேசி அழைப்பை எற்படுத்தினார்.

இவர் தொடர்பாக ஆராய்ந்தபோது இவர் 6 மாத காலம் இலங்கையில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கைக்கு வருகை தந்த சீன நாட்டவர் தொடர்பிலும் மக்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதார சேவைகளுக்காக பயன்படுத்தும் பொருட்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக அல்லது பதுக்கி வைப்போரக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகன மேலும் தெரிவித்தார்.