அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க ஊரடங்கு அனுமதி பத்திரம் தேவையில்லை

துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட விசேட தேவைக்குரியவர்களுக்கான மார்ச் மாத கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோய்க்கொடுப்பனவு என்பன பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வைப்பில் இடப்பட்டுள்ளன.

அத்துடன், தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக தபாலகங்கள் இயங்காத காரணத்தினால் முதியோர்களுக்கான மார்ச் மாதத்திற்குரிய கொடுப்பனவு அந்தந்த பிரிவு கிராம அலுவலர்கள் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக செலுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நியமிக்க்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஒழிப்பு குழு நேற்று மாலை அவசரமாக கூடியது.

கொரோனா வைரஸ் நோய் என சந்தேகிக்கப்படும் நபரை பாதுகாப்பாக தனிமை படுத்தி வைப்பதற்காக பலாங்கொடை ரஜவக்க பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு பயிற்சி நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் ஏனைய வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் தேவைகளுக்காக இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள 50 அறைகள் கொண்ட தனியார் விடுதி மற்றும் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சமூர்தி மண்டபம், இரத்தினபுரி கரபிஞ்ச பிரதேசத்தில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களம், இரத்தினபுரி சமன் தேவாலயத்தின் தக்குமிட மண்டபம் என்பன ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை என்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன தெரிவித்தார்.

இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஊரடங்கு சட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள தேவையில்லை.

இந்த சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வாகனத்திலே அத்தியாவசிய சேவை என மூன்று மொழிகளிலும் எழுதி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு அமைவாக பொருட்களை விநியோகிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் நகர சபை பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் இன்று புதன் கிழமை காலை முன்னெடுத்தனர்.

விசேட அதிரடிப்படையினருடன் மன்னார் காவற்துறையினர் மன்னார் நகர சபை, பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த பணியை முன்னெடுத்தனர்.

மானிப்பாயில் கோரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப் பொருள்களை வழங்க வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் நிதியைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.ஜெபநேசன், வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்துமூலம் கோரியுள்ளார்.

இதேவேளை, உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமையைக் கருத்தில் கொண்டு இன்று இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த அமைச்சரவை பத்திரத்தில் உள்ளூரில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் அதை கொள்வனவு செய்ய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகல பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீடுவீடாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை கொட்டகலை பிரதேச சபை ஆரம்பித்துள்ளது.

0773987468051493214007534567880717868101ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு கொட்டகலை பிரதேச மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம மருத்துவமனையை முழுமையாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காணும் பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவிசாவளை, பாதுக்கை, கொஸ்கம, கரவனெல்ல, ஹொரண, அத்துரகிரிய மற்றும் நவகமுவ பகுதியிலுள்ள மக்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகம் காணப்பட்டால் இந்த மருத்துவமனையில் அதற்கான பரிசோதனைகளை பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய ஊரடங்கு நேரத்தில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜீவனோபாயத்தை இழந்துள்ள அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடக இராணுவத்தினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இதன்போது, மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜாவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பில் கோரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பு வைத்திருந்த 159 நபர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் யாருக்கும் இதுவரை எவருக்கும் எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை என்பதோடு, அவர்கள் முறையாக பொதுச் சுகாதாரப் அதிகாரிகள், பொலிசாரினாலும் அவதானிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களான பொதுச் சந்தைகள், சிறப்பங்காடி, பேருந்து நிலையங்கள், வங்கிகள் போன்ற இடங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்திற்கு முன்பும், பின்பும் கிருமித் தொற்று நீக்கம் செய்ய பிராந்திய சுகாதாரப் பணிமனை, மாநகர சபை நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் கூடும் இடங்களில் சனநெரிசலாவதைக் கட்டுப்படுத்தி பரிந்துரைக்கப்பட்ட இடவெளியினைப் பேணுவதற்கு ஏற்றவகையில் காவற்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.